கோவில்பட்டியில் நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சி
கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் நடைபெற்ற நாணயக் கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் 36 ஆவது நாணயக் கண்காட்சி வெள்ளி விழா கலையரங்கில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாராஜன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில் கண்ணைக் கவரும் வகையில் ஐவகை நிலங்கள் அழகாக காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. பழங்கால அரியவகை நாணயங்களை மாணவர்கள் சேகரித்து படைப்புகளாக வைத்து இருந்தனர். வ.உ.சி. கப்பல் உருவம் பொறித்த நாணயங்கள், எவரெஸ்ட் பள்ளி உருவம் பொறித்த நாணயங்கள், காந்தி உருவம் பொறித்த நாணயங்கள், நாணயங்கள், ரூ. 350, ரூ. 200, ரூ. 150, ரூ. 125, ரூ. 100 ஆகிய நாணயங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், சரித்திர கால நாணயங்கள் ரிசர்வ் வங்கியில் வெளியிட்ட ஞாபகார்த்த நாணயங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்டாம்பு வகைகள், இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், மூவேந்தர் கொடி, ஆதிகால மனிதன் சிலை, பித்தளையில் வடிவமைக்கப்பட்ட வீட்டு உபயோக பொருட்களான ஆளாக்கு, நாளி, கும்பா, கெண்டி போன்ற பொருட்களும், அம்மிக்கல், திருகல், குத்து உரல், ஆட்டுக்கல் முதலிய புழக்கத்தில் இல்லாத பொருட்களும் மற்றும் தபால் தலை பிறந்து வளர்ந்த வரலாறு கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
அதுமட்டுமின்றி உலகத்திலே முதன் முதலாக வெளிவந்த தபால்தலை, தமிழில் வெளியிட்ட பிரிட்டிஷ் மணி ஆர்டர், தமிழ் எழுத்துகளின் பரிணாம வளர்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் வெளியிட்ட நாணயங்கள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடேசன், ஆசிரியர்கள் சித்ரா, விசாலாட்சி, பூங்கோதை, முருகன், முத்துமாரியம்மாள், அருள்அனு மற்றும் மாணவ மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு ரசித்தனர்.