கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் த.மா.கா .முற்றுகைப் போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து வேண்டி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.;
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்.
கோவில்பட்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து வேண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல்வேறு வகையான நூதனப் போராட்டங்கள் அடிக்கடி நடைபெறுவது உண்டு.
அந்த வகையில் கோவில்பட்டி அருகே மந்திதோப்பு சந்தீப் நகரில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பு பகுதியில் போதுமான சாலைவசதி, குடிநீர் வசதி இல்லை என்பதால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும், விரைந்து அந்தப் பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டும், போதுமான அளவு குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அதன் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினையும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினர். இந்தப் போராட்டத்தில் வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கனி, செயற்குழு உறுப்பினர் திருமுருகன், நகர துணை தலைவர் முத்துசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.