கோவில்பட்டியில் கலை, இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
கோவில்பட்டி புத்தகக் கண்காட்சியில் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி புத்தகக் கண்காட்சியில் கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்கள் ஆகியவை சார்பில், கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தக கண்காட்சியில் நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வண்ணம் தீட்டுதல், பரதநாட்டியம், சங்க இலக்கிய பாடல்கள் உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழும் புத்தகமும் வழங்கப்பட்டன. கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன்,வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், சாகித்யஅகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தருமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நூலக ஆய்வாளர் பூல்பாண்டி,ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்,தமிழாசிரியை முருக சரஸ்வதி,ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி,புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ராஜபாண்டி, சீனிவாசன்,சண்முகம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.