கோவில்பட்டி தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்

கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களை கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.;

Update: 2023-04-21 13:56 GMT

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகர் பகுதியில் அமைந்துள்ள உண்ணாமலை கல்லூரியில் வெள்ளாலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காளிராஜ் பி.எஸ்.சி கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் கோபாலகிருஷ்ணன் தூங்கியதாகவும் இதுகுறித்து பேராசிரியர் லாவன்யா கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கல்லூரி முதல்வர் சுப்புராஜிடம் பேராசிரியர் லாவண்யா புகார் தெரிவித்து உள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் மறுநாள் கல்லூரிக்கு வந்த மாணவர் கோபாலகிருஷ்ணனை பேராசிரியர் சுதாகர் வகுப்பறையில் ஒழுங்காக இருக்க முடியாதா? பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்யும் செயலில் ஈடுபடுவாயா? என்று கூறி சட்டையை பிடித்து தாக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த சம்பவத்தை பார்த்த மாணவர் காளிராஜ் ஏன் கோபாலகிருஷ்ணனை அடிக்க முயற்சிக்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து, நீ என்ன கல்லூரி தலைவனா என்று கூறி இரு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த மாணவர்கள் காளிராஜ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், காளிராஜ் மற்றும் அவரது பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரை பேராசிரியர்கள் தாக்கியதாக புகார் எழுந்து போராட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது கோவில்பட்டியிலும் அதே போன்று சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News