கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்; போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே மாணவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-08-18 04:54 GMT

கோவில்பட்டி அருகே, பட்டியலின பள்ளி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (மாதிரி படம்)

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத் (17). இவர் பட்டியலின வகுப்பினை சேர்ந்தவர். ‌கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு கணக்குப்பதிவியல் பிரிவில் படித்து வருகிறார். அதே பள்ளியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகுரு (17), ஷேமந்த் குமார் (17) ஆகியோர் பிளஸ் 1 வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற மாணவர் ஹரி பிரசாத் இருவரும் சண்டை போடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றுவிட்டனராம். இந்நிலையில் ராஜகுரு 10 பேரை அழைத்துக்கொண்டு நேற்று இரவில் லெட்சுமிபுரம் சென்று ஹரி பிரசாத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் ஹரி பிரசாத் காயம் அடைந்தார். அவரது செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்தது. காயம் அடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஏற்கெனவே நாங்குநேரி அருகே பள்ளியில் படித்து வந்த பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது ‌மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Similar News