கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.;

Update: 2023-11-09 13:10 GMT

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு அலுவலகங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் அரசு அலுவலகங்களில் திடீரென சோதனை மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடி வஉசி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சென்று சோதனை மேற்கொண்டு அந்த அலுவலகத்தில் இருந்த 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனை மாவட்டம் முழுவதும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பீட்டர் பால் துரை தலைமையில் ஆய்வாளர்கள் சுதா, அனிதா மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.


இந்த சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக முதல் கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பிற பணியாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News