கோவில்பட்டியில் அகில இந்திய யோகாசனப் போட்டி தொடக்கம்: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அகில இந்திய அளவிலான யோகாசனப் போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ துவக்கி வைத்தார்.;
தமிழ்நாடு ஹதா யோகா அசோசியேசன் மற்றும் இந்தியன் ஹதா யோக் பெடரேஷன் ஆகியவை சார்பில், 3 ஆவது அகில இந்திய யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன் ஷிப் 2023’ போட்டி துவக்கவிழா கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் நடந்தது.
தமிழ்நாடு பொது செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். போட்டியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசும்போது, ‘தென்மாவட்டத்தின் முக்கிய நகரம் கோவில்பட்டி. இங்கு கல்வி நிறுவனங்கள் அதிகம். விளையாட்டு வீரர்களும் அதிகமாக உருவாகி வருகிறார்கள். யோகாசனம் மனிதனின் மனதையும் உடலையும் ஒருங்கிணைக்கிறது. ஆரோக்கியமாக வாழ்வதற்கு யோகா அவசியம். நல்ல சிந்தனையையும் கற்றுத் தருகிறது. செயலையும், சிந்தனையையும் ஒருமுகப்படுத்துகிறது. நோயின்றி வாழ யோகா தேவை’ என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
விழாவில், கொல்கத்தாவைச் சேர்ந்த இந்தியன் ஹதா யோக் பெடரேஷன் பொது செயலாளர் சரத்குமார் தாஸ், முன்னாள் எம்எல்ஏ சுப்பையா பாண்டியன், கோவில்பட்டி நேஷனல் இபொறியியல் கல்லுாரி முதல்வர் காளிதாச முருகவேல், நேஷனல் ஹெர்பல் டிரக் கோ மேனேஜிங் டைரக்டர் வெங்கடேஷ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அர்னால்டு ஜிம் பெனட் நன்றி கூறினார்.
அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் குஜராத், ராஜஸ்தான், உத்ரகாண்ட், சதீஸ்கர், கர்நாடகா, ஒரிஷா உள்ளிட்ட 15 மாநிலங்களிலில் இருந்து 250-க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவு ஆண், பெண் என்று தனித்தனிப் போட்டிகள் நடைபெறுகிறது.