அதிமுகவின் இரட்டை தலைமை எங்களுக்கு பழகி விட்டது. இரட்டை தலைமை தான் எங்களின் கூடுதல் பலம் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர், குளிர்பானங்கள், பழ வகைகளை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இரட்டை தலைமை எங்களுக்கு பழகிப் போய்விட்டது. இரட்டை தலைமை என்பது அதிமுகவிற்கு கூடுதல் பலம் தான்.
அதிமுக தேர்தலில் 140 இடங்களில் தனியாக வெற்றி பெறும். கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்த்து 190 முதல் 200 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.கொரோனா 2 ம் அலையை அரசு எளிதில் கட்டுப்படுத்தி விடும். இன்றைய நிலையில் அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பரவல் 2வது சுற்று தற்போது வந்தாலும் மற்ற மாநிலங்களை விட நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றார்.