திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது - கனிமொழி எம்பி
கோவில்பட்டி அருகே தீத்தம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி சொந்தமான தினசரி சந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவு வாயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய நுழைவு வாயிலைத் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோட்டாட்சியர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்பி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளை குறித்து கேட்டறிந்தனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். அதற்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், பெண் சிசு கொலை தடுக்க வேண்டும்,பெண்களுக்கு கல்வி அவசியம், அப்போது தான் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்,பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியம், அதற்கான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம் இருக்க வேண்டும் என்றார்.
இதன் பின்னர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கனிமொழி எம்பி பேசுகையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். குழந்தை திருமணம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். மக்கள் இதை செய்யக்கூடாது. குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தவறு..குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றார்
இதில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
இதன் பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்சியில் இருக்கும் போது எதையும் செய்யாத அதிமுக, திமுக செய்வதை பார்த்து பயப்படுகின்றனர். அந்த பயத்தின் வெளிப்பாடு காரணமாக திமுக எதையும் செய்யவில்லை என்று அதிமுக கூறுகின்றனர் .10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக செய்யாததை திமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார். திமுகவின் செயல்பாடுகள் தான் அதிமுகவின் விமர்சனத்திற்கு பதிலாக இருக்கும் என்றார்.
தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவிக்கு சொந்தமான ஆதார மையங்களில் பணி புரியக்கூடிய பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு பணி நிறுத்தம் செய்யப்படுவதாக எழுந்த புகார் குறித்து கேட்டதற்கு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.