கோவில்பட்டியில் தேர்தல் வாக்கு பதிவின் போது அதிமுக நிர்வாகியிடம் 12500 ரூபாய் பணம் பறித்தது மற்றும் அவரது பைக்கினை எரித்தது தொடர்பாக அமமுக, திமுக நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியாபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் அதிமுகவை சேர்ந்தவர். கடந்த 6ந்தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. அப்போது புதுக்கிராமம் வாக்குசாவடி மையம் அருகே ஆரோக்கியராஜ் நின்று கொண்டு இருந்த போது, அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி வேலு மற்றும் சிலர், ஆரோக்கியராஜ் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கூறி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், ஆரோக்கியராஜை மீட்டனர். இந்நிலையில் அமமுகவினர் தன்னை தாக்கி ரூ12,500 பணத்தினை பறித்ததாக ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அமமுக நிர்வாகி வேலு உள்பட 11பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போல் ஆரோக்கியராஜ் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த அவர் பைக்கினை மர்ம நபர்கள் கடந்த 6 ந்தேதி தீ வைத்து விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் அவரது பைக் சேதமடைந்தது. இது தொடர்பாக ஆரோக்கியராஜ் மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் வேலு, கோமதிசங்கர், திமுகவை சேர்ந்த கணேசன் உள்பட 5 பேர் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.