கோவில்பட்டியில் காந்தியின் ஓவியத்திற்கு அகல் விளக்கேற்றி மரியாதை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோவில்பட்டியில் காந்தியின் ரங்கோலி ஓவியத்துக்கு அகல் விளக்கு ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டின் விடுதலைக்காக அகிம்சை மூலம் பாடுபட்ட மகாத்மா காந்திஜியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்துவது உண்டு.
அதன்படி, காந்திஜியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி கொண்டய ராஜூ ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் காந்தி ஜெயந்தியை வரவேற்கும் வகையில் ரங்கோலி ஓவியத்திற்கு அகல் விளக்கேற்றி மரியாதை செய்யும் நிகழ்ச்சி பயிற்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது, கோவில்பட்டி கொண்டய ராஜூ ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் காந்திஜியை ரங்கோலி கோலமாக வரைந்து அகல் விளக்கேற்றி மரியாதை செய்தனர். மேலும், கோவில்பட்டியில் உள்ள அனைத்து பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்கவும், துணி பைகளை பயன்படுத்தவும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருக பூபதி தலைமை வகித்தார். ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்து முருகன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய பயிற்சி பள்ளி ஆசிரியை முத்துகோமதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் பேச்சியம்மாள், விக்னேஸ்வரி, விஜயலட்சுமி, தீபிகா, ராஜலட்சுமி, சத்தியரூபனி ஆகியோர் ரங்கோலி கோலத்தில் காந்திஜியை வரைந்து அதில் அகல் விளக்கு ஏற்றி மரியாதை செய்தனர். இதில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஓவிய பயிற்சி பள்ளி ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.