கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை: மதிமுக கோரிக்கை
கோவில்பட்டியில், அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.;
தமிழகம் முழுவதும் கிராமப் பகுதிகளுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதேபோல, நகரில் மையத்தில் இருந்து புறநகர் பகுதிகளுக்கும் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த மினி பஸ்களில் அரசு நிர்ணயித்தத் தொகையை விட கூடுதல் தொகை கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும், சில மினி பஸ்கள் அதற்காக ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில் செல்லாமல் வேறு வழித்தடத்தில் செல்வதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், இயக்கப்படும் மினி பஸ்கள் சிலவற்றில் அரசு நிர்ணயித்தத் தொகையை விட கூடுதலாக தொகை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியனிடம் மதிமுக நகரச் செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:
மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 5 வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறி இருக்கும் நிலையில், கோவில்பட்டி பகுதியில் இயக்கப்படும் மினி பஸ்களில் குறைந்தபட்ச கட்டணமே பத்து ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஏழை ,எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மினி பஸ்களில் கட்டண விபரம் மற்றும் இயக்கப்படும் நேரம் குறித்து விவரங்களின் பட்டியலை வைக்க வலியுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனு அளிக்கும்போது, மதிமுக நகர இளைஞரணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகரத் துணைச் செயலாளர் லியோ செண்பகராஜ், நகர பொருளாளர் தம்பித்துரை, வார்டு செயலாளர்கள் சுந்தர்ராஜ், வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.