கோவில்பட்டியில் நில மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் கைது
கோவில்பட்டியில் ஆள்மாறாட்டம் செய்து ஒரு ஏக்கர் 68 செண்ட் நிலத்தை மோசடி செய்ய உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு கோவில்பட்டி அய்யனேரி கிராமத்தில் கிராம சர்வே எண். 335/2A-இல் ஒரு ஏக்கர் 68 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. மேலும், சண்முகம் என்பவருக்கு சண்முகத்தாய் மற்றும் காளியம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் சண்முகதாய்க்கு ஆண் மற்றும் பெண்கள் என 7 பிள்ளைகளும், இரண்டாவது மனைவி காளியம்மாளுக்கு ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதியை சேர்ந்தவர்களான கருப்பாயி (48), கணபதியம்மாள் (60), மகேஸ்வரி (41) ஆகியோர் சேர்ந்து சண்முகத்தின் இரண்டாவது மனைவி காளியம்மாள் என்பவரை கடந்த 1975 ஆம் ஆண்டு அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கூறி கடந்த 2001 ஆம் ஆண்டு போலியான வாரிசு சான்றிதழ் தயார் செய்து உள்ளனர்.
அதில் கருப்பாயி போலியான வாரிசு சான்று பெற்றும், கணபதியம்மாள் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்தும், சண்முகத்தின் 1 ஏக்கர் 68 செண்ட் நிலத்தை மோசடி செய்துள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (34) என்பவர் மோசடியில் ஈடுபட்டோருக்கு உடந்தையாக போலியான அரசாங்க முத்திரை தயார் செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சண்முகத்தின் மகன் அழகுமுத்து (67) மற்றும் இறந்ததாக கூறப்பட்ட அவரது சித்தி காளியம்மாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் காளியம்மாள் என்பவர் கடந்த 27.02.2023 அன்று இறந்துவிட்டார். கோவில்பட்டி வருவாய் வட்டாட்சியர் கடந்த 01.06.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்துக்கு நிலத்தை மோசடி செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனை தொடரந்து அழகுமுத்து அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மோசடியில் ஈடுபட்ட செல்வக்குமாரை கைது செய்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புரையவர்களை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு மற்றவர்களை தேடி வருகின்றனர்.