கோவில்பட்டியில் கொலை உட்பட 6 வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் கொலை உள்பட 6 வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் தர்மராஜா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, கோவில்பட்டி தாமஸ் நகர் ஜங்ஷன் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கோவில்பட்டி மறவர் காலனி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி (21) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 5 வழக்குகளும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.