தேசிய கடல்சார் விளையாட்டு போட்டிக்கு கோவில்பட்டி இளம் பெண்கள் 3 பேர் தகுதி
தேசிய அளவிலான கடல்சார் விளையாட்டு போட்டிக்கு கோவில்பட்டி தனியார் ஆலையில் பணிபுரியும் இளம்பெண்கள் மூவர் தகுதி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துகுட்டி, அயன்விருசம்பட்டியை சேர்ந்த முத்துமாரியம்மாள், சிதம்பரபுரத்தினை சேர்ந்த ராமலெட்சுமி ஆகிய மூன்று 3 பெண்களும் பள்ளி படிப்பினை முடித்த பின்னர் குடும்பத்தின் வறுமையின் காரணமாக மேற்படிப்பினை தொடரவில்லை.
இதையெடுத்து, படிப்பை நிறுத்திய மூன்று பேரும் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் அருகே செயல்பட்டு வரும் லாயஸ் மில் டெக்ஸ்டைல் பிரிவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக டெய்லராக பணியாற்றி வருகின்றனர். மேலும், அந்த மில் நிர்வாகம் இவர்களுக்கு உயர்கல்வி படிக்கவும் உதவி செய்து வருகிறது.
3 பெண்களும் சிலம்பத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதால் அவர்களின் விளையாட்டு திறனை கருத்தில் கொண்டு, SUP என்று அழைக்கப்படும் பால்க் பே ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டிக்கு தயார்ப்படுத்தி உள்ளனர். இதற்காக ராமநாதபுரத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
அது மட்டுமின்றி கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், ராமநாதபுரத்தில் உள்ள குவெஸ்ட் அகாடமியில் நடைபெற்ற பால்க் பே ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் (SUP) சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓபன் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் மூன்று பெண்களும் கலந்து கொண்டனர்.
அதில் முத்துக்குட்டி முதலிடத்தினையும், முத்துமாரியம்மாள் இரண்டாவது இடத்தினையும், ராமலட்சுமி மூன்றாவது இடத்தினையும் பிடித்து அசத்தியது மட்டுமின்றி தேசிய அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர். தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மூன்று பெண்களை மில் நிர்வாகம் பாராட்டி உள்ளது.
சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட தங்களுக்கு தங்களுடைய நிர்வாகம் கொடுத்த ஊக்கத்தினால் வெற்றி பெற முடிந்ததாகவும், இது தங்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்துள்ளதாக வெற்றி பெற்ற இளம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.