ஒரே கிராமத்தில் 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11). இவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவரும். இவரது தம்பி அருண்குமார் (7) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகியோர் அங்குள்ள கண்மாய் பகுதியில் நேற்று விளையாடச் சென்று உள்ளனர்.
அவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் கண்மாய் கரையோரம் மகேஷ்குமாரின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் தகவல் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண்மாய் நீரில் மாணவர் அருண் உடல் மிதந்தது. உடனடியாக கிராமத்து இளைஞர்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.
தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் காவல் நிலைய போலீசார் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக பெய்த கோடை மலையில் கண்மாயில் நீர் வரத்து ஏற்பட்டு தண்ணீர் உள்ளது. இதில், கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள், குளிப்பதற்காக இறங்கிய போது நீரில் மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை நடைபெறும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்து உள்ளனர்.