கோவில்பட்டியில் 2வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன் கோபி (எ) செல்வகணேஷ். கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவருக்கும் நாகலாபுரம் புதூரைச் சேர்ந்த சேர்மத்துரை என்பவரது மகள் அருள்சங்கரிக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நிரஞ்சன் என்ற ஒன்றரை வயது மகன் இருக்கிறார். திருமணம் முடிந்தது முதல் செல்வகணேஷ் குடும்பத்திற்கும் அருள்சங்கரிக்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் செல்வகணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் புதிய வீடு வாங்க, புதிய கடை தொடங்க அருள்சங்கரி வீட்டில் பணம் வாங்கி வரும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் செல்வகணேஷ், அருள்சங்கரி இடையே அடிக்கடி பிரச்சனை எழுவதும் உறவினர்கள் சமாதானப்படுத்தி செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் அருள்சங்கரி கருவுற்ற போது, அந்த கருவினை கலைக்க வேண்டும் என்று செல்வகணேஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் பிரச்சனை எழ அருள்சங்கரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இடையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் இருக்கும் கோவிலில் செல்வகணேஷ்க்கும், சிவகாசி சாட்சியாபுரத்தினை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக அருள்சங்கரி குடும்பத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அருள்சங்கரி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை மீறி செல்வகணேஷ் 2வது திருமணம் செய்ததாக தெரிகிறது. திருமணம் முடித்த கையோடு செல்வகணேஷ் தப்பியோட முயன்ற போது, அருள்சங்கரி குடும்பத்தினர் போலீசார் உதவியுடன் செல்வகணேஷை சுற்றி வளைத்து பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அருள்சங்கரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனக்கும், தனது குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அருள் சங்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.