கோவில்பட்டியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

Update: 2021-02-14 05:16 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நெல்லை அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் முதலிடத்தினை பிடித்து சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் களம் உடற்பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி கடந்த 2 நாள்களாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு பரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 32 அணிகளும், பெண்கள் பிரிவில் இருந்து 12 அணிகளும் பங்கேற்றன. சென்னை, மதுரை, சேலம், கோவை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவு போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையிலும், பெண்கள் போட்டி லீக் முறையிலும் நடைபெற்றது. பெண்கள் பிரிவு இறுதி போட்டியில் சேலம் ஆத்தூர் பாரதி அணியும், கோவில்பட்டி களம் அணியினரும் மோதினர். இந்த போட்டியில் 25 - 14, 25 - 13 என்ற புள்ளி கணக்கில் சேலம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றது. 2வது இடத்தினை கோவில்பட்டி அணியும், 3,4 இடங்களை ஓசூர், தேனி அணிகள் பிடித்தன.

ஆண்கள் பிரிவின் இறுதி போட்டியில் நெல்லை மாவட்டம் பனங்குடி அணியும், எட்டயபுரம் படர்ந்தபுளி லியோ அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பனங்குடி அணி 25 - 22, 25 - 20 என்ற புள்ளி கணக்கில் நெல்லை பனங்குடி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றது. 2வது இடத்தினை படர்ந்தபுளி அணியும், 3,4 இடங்களை வரகனூர், தூத்துக்குடி அணிகள் பெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இந்த போட்டியை கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.

Tags:    

Similar News