விவசாயிகள் விளைவிக்க கூடிய பொருட்களை அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசுகையில், ஆசியாவிலேயே சுமார் ஆயிரத்து 600 ஏக்கரில் தமிழகத்தில் தான் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதிகளவு பால் கொடுக்க கூடிய கலப்பின பசு உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதைப்போன்று அதிகளவு எடை கொண்ட ஆடுகளை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் விளைவிக்க கூடிய பொருட்களை அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நானும் எனது கல்வியை அரசு பள்ளியில்தான் படித்தேன். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் கல்வி பயில இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மருத்துவக் கல்வியில் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 ஒதுக்கீடு என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வு காரணமாக கடந்த ஆண்டு 6 பேர் மட்டுமே மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தனர்.ஆனால் இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத திமுக தலைவர் ஸ்டாலின் விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுவது கண்டனத்துக்குரியது. எதைப் பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். இனி இதுபோன்று பேச வேண்டாம் என்று அன்போடு விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.