மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு விசாரணையைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை மகனான ஜெயராஜ், பெலிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கணவரை இழந்த செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் சாத்தான்குளம் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தபோது காவல்துறையினரையும் செய்தியாளர்களையும் மிரட்டியதுடன் திட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.பணபலம், ஆள்பலத்தால் சாட்சிகளை மிரட்டிக் கலைக்க வாய்ப்புள்ளதால் விசாரணையைக் குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் இது குறித்து சிபிஐயின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.