திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண் குத்திக் கொலை: 5 பேர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே நிலத தகராறில் பெண்ணை கொலை செய்த, கணவன் மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்காலடி ஊராட்சி அரகரை பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவருக்கும் கொக்காலடி கிராமத்தைச் சேந்த ரவி என்பவரின் மனைவி ரேணுகா தேவிக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரத்தில் விமலாவுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பாகி உள்ளதாக கூறப்படுகிறது. ரேணுகாதேவி நேற்று காலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று ரேணுகாதேவி தரப்பினர் கைதாகி இருந்த நிலையில், விமலா தரப்பினர் அந்த இடத்தில் வேலி வைத்து விவசாய பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மாலை போலீஸ் காவலில் இருந்து விடுதலையான ரேணுகாதேவி மற்றும் அவரது கணவர் ரவி,மைத்துனர்கள் கண்ணன், மனோ, ராஜா ஆகியோர் இந்த விவகாரத்தில் விமலாவை கத்தியால் குத்தியதில் விமலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் விமலாவின் மகன் அரவிந்தும் காயம் ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரேணுகாதேவி அவரது கணவர் ரவி மற்றும் மைத்துனர்கள் மனோ ,ராஜா கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் ஒரு பெண்ணை 5 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.