முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்
முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடல்வழியாக ஏலக்காய் மூட்டை கடத்தப்படுவதாக முத்துப்பேட்டை கடலோர பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து நேற்று இரவு கடலோர காவல்படை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் ரகுபதி சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பன் சாமி நுண்ணறிவு பிரிவு காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முத்துப்பேட்டை கோரை ஆற்றில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 260 கிலோ எடை கொண்ட ஒன்பது ஏலக்காய் மூடைகள் படகில் ஏற்றியதை பார்த்த அதிகாரிகள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த நெய்னா முகமது என்பவரை உடனடியாக சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு முத்துப்பேட்டை சுங்க இலாகா அலுவலகத்தில் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 3.75 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது.