முத்துப்பேட்டையில் கனமழையால் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
இதுவரை முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 6000 ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர் சேதம் கணக்கிடப்பட்டுள்ளதாக தகவல்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 2 நாட்களாக கனமழை பெய்தது இதன் காரணமாக திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி அவர்கள் இன்று மருதவனம், மாங்குடி, சங்கேந்தி, உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்ட பின்னர் பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது:- முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 34 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 19 சென்டிமீட்டர் அளவில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் இப்பகுதிகளில் வேளாண்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்கள் சேதம் கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுத்தை கணக்கிலும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவின் அடிப்படையில் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.