திருத்துறைப்பூண்டியில் திமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம்
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமைச்சர் சக்கரபாணி அறிமுகம் செய்து ஆலோசனை வழங்கினார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் இறங்கியுள்ளன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 17 வார்டுகளில் திமுக நேரடியாக போட்டியிட்ட நிலையில் 5வது வார்டில் போட்டியிட்ட திமுக நகர செயலாளர் ஆர்எஸ் பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் வாபஸ் பெறப்பட்டதால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மீதமுள்ள 16 வார்டுகளிலும் திமுக நேரடியாகவும், இந்திய கம்யூனிஸ்டு 2 இடங்களிலிலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலிலும், இந்திய தேசிய காங்கிரஸ் மூன்று இடங்களிலும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதற்கான கூட்டம் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அந்தந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வேட்பாளர்களுக்கு வீடுவீடாக பிரச்சாரம் செய்து வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.