டெல்டா பகுதியில் வெள்ளத்தை தடுக்க நிரந்தர தீர்வு- மு.க. ஸ்டாலின் பேட்டி
டெல்டா மாவட்டங்களில் வெள்ளத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றார்.மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு மனை பட்டா, கூரை வீடு பகுதி சேதம், கால்நடை இறப்பு, உள்ளிட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்ததாவது:-
நீர்வளத்துறை, ஊரக உள்ளாட்சி துறை சார்பில் நீரை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஆட்சிக்கு வந்த உடன் டெல்டா மாவட்டங்களில் 4000கி.மீ. தூர் வாரப்பட்டது. இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது.
உழவர்களை கண் போல் பாதுகாக்கும் அரசு தி.மு.க. அரசு. கடந்த நான்கு மாதங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்க கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையில் இதுவரை 400இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தி.மு.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசு செயல் பட்ட விதத்தை மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். தமிழக அரசு நிரந்தர தீர்வை எடுத்து கொண்டு வருகிறது.
சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு புவியியல் அமைப்பு தொடர்பான ஆய்வு செய்து அறிக்கை தரும். டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களை பொறுத்த வரை தூர் வாரும் பணி நடைபெற்றதன் காரணமாக தான் பெருமளவு சேதம் தடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மெய்யநாதன், ரகுபதி, சக்கரபாணி மற்றும் திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் , மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ. கே. எஸ். விஜயன், மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்