நெல் மூட்டைகள் சேதம்: மழையில் நனைந்து மூட்டையிலேயே முளைத்த சோகம்

Update: 2021-04-21 03:47 GMT

திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் அலட்சியத்தால் வெட்டவெளியில் அடுக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து மூட்டையிலேயே முளைத்து விட்டது.


காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிரிட்டு அறுவடைச் செய்கின்ற நெல் மூட்டைகளைக் கொள் முதல் செய்வதற்காக, அரசின் சார்பாக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஜனவரி மாதம் முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வேறு மாவட்டங்களுக்கும், சேமிப்புக் கிடங்குகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதியிலுள்ள பல்வேறு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, மார்ச் மாதம் துவக்கத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல், வெட்டவெளியில், எவ்வித பாதுகாப்புமின்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், ஆடு, மாடு, பன்றிகள் மூலம் ஒரு புறம் சேதமடைந்தது. மறுபுறம் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறையும் வாய்ப்பும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வானிலை மையமும், டெல்டா மாவட்டம் உள்ளிட்டத் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, அரசு கொள்முதல் செய்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து சேதமடைந்து மூட்டையிலேயே முளைத்து விட்டது. எனவே உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை லாரி மூலம் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News