சம்பா துவங்காத நிலைக்கு காவிரி மேலாண்மை ஆணையமே பொறுப்பு- பி.ஆர்.பாண்டியன்

குருவை கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி 13 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள முடியாத முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-08-07 14:30 GMT

ஆலத்தம்பாடி பகுதியில் கருகும் பயிரை பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் கச்சனம் ,ஆலத்தம்பாடி, விளக்குடி ,மணலி பொன்னிறை உள்ளிட்ட கிராமங்களில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் ஆலத்தம்பாடி பகுதியில் கருகும் பயிரை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி சுமார் 3.50லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சம் ஏக்கரில் சாகுபடி பணிகளை முழுமையாக தொடரமுடியாமல் முடங்கிவிட்டது. வரும் காலத்தில் முற்றிலும் குருவை கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்போது சம்பா சாகுபடியையும் துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் விவசாயிகள் செய்வது அறியாது பரிதவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை டெல்லியில் நேரில் சந்தித்து கர்நாடக அணைகளை ஆணையத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் .

இல்லையேல் தமிழகத்தில் சாகுபடி அழிந்து போகும் என்று எடுத்துக் கூறினேன். உடனடியாக சென்று பார்வையிட்டு ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இதுவரையிலும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழகம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க போகிறது. குருவை கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி 13 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள முடியாத முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பிற்கு முழுமையும் காவிரி மேலாண்மை ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் உடனடியாக கர்நாடகாவிடம் உரிய தண்ணீரை ஆணையத் தலைவர் பெற்றுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து தண்ணீரை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.இல்லையேல் காவிரி டெல்டா போராட்ட களமாக மாறும் என எச்சரிக்கிறேன் என தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட கௌரவத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News