திருத்துறைப்பூண்டி: 100 வகை பாரம்பரிய நெற்பயிர்களின் அறுவடை துவக்கம்
திருத்துறைப்பூண்டி அருகே பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் பயிரிடப்பட்ட 100 வகையான பாரம்பரிய நெல் பயிர்களின் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் தெரிவித்துள்ளதாவது:- மறைந்த பாரம்பரிய நெல் பாதுகாவலர் நெல் ஜெயராமன் அவர்களால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யும் நோக்கத்துடன் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய வேளாண் பண்ணையில் மாப்பிள்ளைச்சம்பா, காட்டுயாணம், இலுப்பைபூச்சம்பா, சீரகச்சம்பா, கல்லுருண்டை சம்பா, சிவப்பு கவுனி, கருப்பு கவுனி, மஞ்சள் பொன்னி, சிறு மிளகி, செம்மிளகி, மிளகு சம்பா , குடவாளை, தங்கச்சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, சின்னார், திருப்பதிசாரம், கருவாச்சி, குருவிக்கார், குழியடிச்சான், சூரக்குறுவை, கருங்குறுவை, ஒட்டடையான், குள்ளக்கார், பூங்கார், துளசி வாசம், கொத்தமல்லி சம்பா, குண்டுக்கார், பெருங்கார், நீலம் சம்பா , வாலன், காட்டுப்பொன்னி போன்ற 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு தற்பொழுது அனைத்து ரகங்களும் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
அறுபது நாட்கள் வயது முதல் 200 நாட்கள் வயதுடைய அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக பாரம்பரிய நெல் ரகங்கள் பருவநிலை மாற்றத்தை எதிர் கொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு உழவர்களுக்கு நல்ல மகசூலைத் கொடுக்க கூடியதாகும், இவ்வாண்டும் பெய்த கனமழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களை தாண்டியும் நல்ல முறையில் விளைச்சல் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு தமிழக அரசு விதை பண்ணைகளில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு இருப்பது நல்ல ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது மேலும் ரசாயன சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளும் இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.