வலங்கைமான் பிடாரியம்மன் கோவில் திருவிழா
நூற்றாண்டு பழமையான எல்லைப்பிடாரியை காவல்தெய்வமாக பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.;
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமையான எல்லைப்பிடாரி காவல்தெய்வமாகவும் பக்தர்களால் போற்றி வணங்கப்படும் கோயில் தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு மேற்கொண்ட நடத்தை விதிமுறைகள் படி கடந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டும்,இரண்டாவது அலை வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு கடும் நடைமுறைகளை அறிவித்துள்ளது. இதில் கோவில்களில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை செய்துள்ளது. இருப்பினும் கோயில் வளாகத்திற்குள்ளேயே பக்தர்கள் இல்லாத நிகழ்ச்சிகளை நடத்தவும் அறிவுறுத்திய நிலையில், இதையடுத்து நேற்று நடந்த திருவிழாவில் கருவறைபிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை விசேஷ அலங்காரத்துடன் உற்சவ அம்மன் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்திலேயே, திருவிழா உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறாமல், கோவில் வளாகத்திலேயே திருவிழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் முக்கிய சில பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.