மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் தற்காப்புக் கலை மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தினர்.;

தற்போது கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலைக் கிராமப் பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனையொட்டி தமிழக அரசுத் துறையினர் பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், முன் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பேரளத்தில் உள்ள ஏ.வி பவர் ஜிம் என்ற பயிற்சி நிறுவனத்தில் கராத்தே, தாய் ஷீ குங்பூ போன்றத் தற்காப்புக் கலைகளைப் பயின்று வரும் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள், பேரளம் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெருப் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தினர். நிகழ்ச்சியில் பேரளம் காவல்துறை ஆய்வாளர் மு.மணிமாறன் கலந்துகொண்டு, பொதுமக்கள், அரசு அறிவித்துள்ள கொரோனா முன் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும், முகக்கவசம் அணிந்து வெளியில் வருவது மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கை கழுவுவதுப் போன்ற பல்வேறு முன் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
பின்னர் பேருந்து நிலையப் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயிற்சி நிலையத்தின் சார்பாக முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கி, பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் வழங்கினார். கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்ச்சியில், பேரளம் ஏ.வி பவர் ஜிம் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த கராத்தே மற்றும் குங்ஃபூ மாணவர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி நிலையத்தின் நிறுவனர் அ.திவாகர், பயிற்சியாளர் க.செல்வகுமார் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.