வலங்கைமான் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 7 பேர் கைது

வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-13 08:32 GMT
வலங்கைமான் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட  ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், ஆலங்குடி, நன்னிலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயுதங்களை காட்டி மிரட்டி பொதுமக்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்த சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நன்னிலம் டி.எஸ்.பி. இளங்கோவன் உத்தரவின்பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் விஜயா,  குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் முத்துசாமி மற்றும் கருணாநிதி மனோகரன் மதன்ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் .

இந்நிலையில் வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபி மகன் சரவணன்(20), விக்னேஷ்(18), வலங்கைமான் கீழ தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேஷ்(28), திப்பிராஜபுரம் கீழ தெருவைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் அறிவுச்செல்வம் (22) ,திப்பிராஜபுரம் கோழியகுடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகன் நந்தகுமார்(17) ,கும்பகோணம் அடுத்த ஏனநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த அம்பிகாபதி மகன் தனுஷ்(18) மற்றும் கருவளச்சேரி மேல குளத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அஜித்குமார் (27) ஆகிய வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் வலங்கைமான் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் செல்போன்கள் நகைகள் உள்ளிட்டவைகளை பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்தது தெரியவந்தது.

அதனையடுத்து அவர்களிடமிருந்து ஐந்து பட்டாக் கத்திகள் ஒன்பது விலை உயர்ந்த செல்போன்கள் ,தாலியுடன் கூடிய செயின், தோடு ,வெள்ளி கொலுசு, வெள்ளி கை செயின் உள்ளிட்ட பொன் மற்றும் வெள்ளி பொருட்கள் 6 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை யடுத்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News