பாரபட்சமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசுக்கு கோரிக்கை

பாரபட்சமின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-24 11:30 GMT

ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கண்டிரமாணிக்கம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது வரை திறக்கப்படவில்லை.

கண்டிரமாணிக்கம் பகுதியை சுற்றியுள்ள குச்சிபாளையம், பிலாவடி, சீதக்கமங்கலம், செம்பியம்கூந்தலூர் உள்ளிட்ட 8 கிராமங்களில், சுமார் 1200 வேலி அளவிற்கு முன் பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டது. அறுவடை செய்த நெல்லினை கண்டிரமாணிக்கத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கடந்த 20 நாட்களாக விவசாயிகளால் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் இடம் இல்லாத காரணத்தினால், ஒரு கிலோ மீட்டர் வரை சாலையில் விவசாயிகள் நெல்லினை கொட்டி வைத்துள்ளனர். திடீரென மழை பெய்யும் பட்சத்தில் நெல் பாழாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், இங்குள்ள நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில், பல இடங்களில் திமுகவினரின் மூலமாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது..

இதுகுறித்து விவசாயி அர்ஜூனன் கூறும்போது, கண்டிரமாணிக்கத்தில் உள்ள DPC நிரந்தரமானது. இதுவரை திறக்கப்படவில்லை; ஆனால் தற்காலிக DPC சில இடங்களில் திறக்கப்பட்டு நெல் எடுத்து வருகின்றனர்.

கண்டிரமாணிக்கம் கிராமத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல அதிகாரியிடம் இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்டெடுக்க கண்டிரமாணிக்கத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News