அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நன்னிலம் அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து, நன்னிலம் ஒன்றிய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மருத்துவமனையின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மருத்துவமனையில் பல் டாக்டர் இல்லை எனவும் பாம்பு கடி மற்றும் நாய் கடிக்கு மருந்துகள் இல்லை எனவும் ஆம்புலன்ஸ் சரியாக செயல்படுவதில்லை மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொடர்ந்து நன்னிலம் வட்டாட்சியர் பத்மினி, வருவாய் அலுவலர் மாறன் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது. நன்னிலம் பகுதி திமுக நகர செயலாளர் பக்கிரிசாமி சமாதனம் செய்ய முற்பட்டார், இருப்பினும் கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு சொல்லும்போது 'மருத்துவமனை யின் மிக மோசமான நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த கோரிக்கைகள் நிறைவேற மறுக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும்' என்று கூறினார்.