நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு விவசாய சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அரசு மூடி வருகிறது.. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம் முழுதும் நடப்பாண்டில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் பெறப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முழுதும் சுமார் 450 நிரந்தர மற்றும் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில்.. தற்பொழுது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பல இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடி வருகின்றார்கள்.
பல இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது, மேலும் சில இடங்களில் அறுவடை நடைபெறாமலும், நடைபெறும் நிலையிலும் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கொஞ்சம் கொஞ்சமாக மூடி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அரசின் இந்த நிலைப்பாடு குறித்து தமிழக விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் சேதுராமன் கூறும்போது
'நெல் கொள்முதல் செய்வதில் அரசு பல குளறுபடி செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில்லை. தேவை இல்லாத இடத்தில் திறக்கின்றனர். பல இடங்களில் அறுவடை முடியாத நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு மூடி வருகிறது. மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்க வேண்டும்என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.