டாஸ்மாக் கடை திருட்டுக்கு, ஊழியர்களை பலி கெடாவாக்கூடாது சிஐடியு கோரிக்கை
டாஸ்மாக் கடைகளில் திருடு போகும் மதுபாட்டில்களுக்கு ஊழியர்களைப் பொறுப்பாக்கி, தொகையினை ஈடுகட்டும் போக்கினை நிர்வாகம் மாற்றிக் கொள்ள வேண்டுமென திருவாரூர் மாவட்ட சிஐடியு சங்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் டி. முருகையன் கோரிக்கை விடுத்துள்ளார்.;
திருவாரூர் மாவட்ட சிஐடியு சங்கத்தின் நிர்வாகிகள், தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபானகடை ஊழியர்களைத் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தித்தபின், பேரளத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது,
திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக 108 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 138 மேற்பார்வையாளர்களும், 318 விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவற்றில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத சுடுகாடு போன்ற பகுதிகளிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும் இயங்கி வருகிறது. இதுபோன்று பாதுகாப்பு இல்லாத இடங்களில் இயங்கி வருகின்ற மதுபான கடைகளில் அவ்வப்போது மதுபான பாட்டில்கள் திருடப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கடையின் மேற்பார்வையாளர்கள், டாஸ்மாக் நிர்வாகத்திடம் தெரிவித்தால், முறையாக காவல்துறையிடம் புகார் அளிக்க அறிவுரை வழங்கிடாமல், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களைப் பொறுப்பாக்கித் திருடுபோன மதுபாட்டில்களுக்குள்ளத் தொகையினைக் கட்டி சரி செய்திட வேண்டுமென வாய்மொழியாகத் தெரிவிக்கின்றனர்.
ஊழியர்களிடம் வசூல் செய்யும் போக்குத் தொடர்ந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்தப் போக்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. குடவாசல் பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஆறு மாதங்களில் இரண்டு முறை மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளது.
முதல்முறை ரூபாய் 15000 மதிப்புள்ள மது பாட்டில்களும், இரண்டாவது முறை ரூபாய் 1,40,000 மதிப்புள்ள மது பாட்டில்களும் திருடு போய் உள்ளது.திருடு போன இந்த மது பாட்டில்கள் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை.
அதேபோல நன்னிலம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தொடர்ந்து இரண்டு முறை திருட்டு நடந்துள்ளது. முதல் முறை ரூபாய் 10,000மும், இரண்டாவது முறை ரூபாய் 40,000 மதிப்புள்ள மது பாட்டில்களும் கொள்ளை போயுள்ளது.
இது போல டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் மதுபாட்டில்கள் திருட்டு சம்பந்தமாக, காவல் துறையில் புகார் தெரிவித்து, திருடர்களைக் கண்டுபிடித்துத் தண்டனை அளிப்பதன் மூலம் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் திருட்டுக்களைக் குறைக்க முடியும்.
அவ்வாறு காவல்துறையில் புகார் அளிக்காமல், திருட்டுப் போனதை அந்த கடை ஊழியர்களே சரி செய்திட வேண்டுமென, டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடைபிடித்து வரும் போக்குக் கண்டிக்கத்தக்கது.
அதேபோல மக்கள் நடமாடும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், மக்களின் எதிர்ப்பின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் செலவையும், அந்தந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்களே ஏற்க வேண்டுமென வலியுறுத்தி, அவர்களைப் பொறுப்பாக்கிச் செலவு செய்திட சொல்லும் போக்கும் கண்டிக்கதக்கது.
இதுபோன்ற ஊழியர் விரோதப் போக்கினை டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளில் திருடு போகும் மது பாட்டில்கள் பற்றிய புகாரைக் காவல்துறைக்கு அளித்து திருடர்களைக் கண்டு பிடித்துத் தொடர் திருட்டுக்கள் நடைபெறாமல் தடுத்திட வேண்டும்.
கடைகளில் பணிபுரியும் ஊழியர்களைப் பாதுகாத்திடவும், மதுபான கடைகள் மாற்றும் செலவை டாஸ்மாக் நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென சிஐடியு திருவாரூர் மாவட்டக் குழுவின் சார்பாக கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகம் தனது ஊழியர் விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளவில்லையென்றால், விரைவில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை ஒன்றுதிரட்டி, டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் முன்பு சிஐடியு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென தெரிவித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலாளரின் செய்தியாளர் சந்திப்பின்போது, சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் டி.வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.