தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசு பொது மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் நன்னிலத்தில் ஆர்ப்பாட்டம்.;
தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலையை குறைப்பதாகவும், பெட்ரோல் விலையை குறைப்பதாகவும், சட்டமன்ற முதல் கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றுவோம் என்றும், மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிக்கு வழங்குவதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அதிமுகவினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை திமுக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான ஆர். காமராஜ் தலைமையில் அவரது இல்ல வாசலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பொழுது முன்னாள் அமைச்சர் காமராஜ், நிதி நிலைமையை காரணம் காட்டி வளர்ச்சித் திட்டங்களை தள்ளிப்போடுவது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் எனக் கூறினார். முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த 'உரிமைகுரல்' ஆர்ப்பாட்டத்தில், நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கோபால், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்ந்த செல் சரவணன் மற்றும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராமராவ் உள்ளிட்ட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.