திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம்
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் விவசாய உற்பத்தியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் நபார்டு வங்கி இணைந்து காவிரி டெல்டா மாவட்டங்களை சார்ந்த விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள், பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தியது.
இந்த பயிற்சி முகாமில் வியாபார குறியீடுகள் மற்றும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உலர் மீன் உற்பத்தி செய்பவர்கள், தானிய பிஸ்கட் செய்பவர்கள் மற்றும் மஞ்சுளா இயற்கை நஞ்சு இல்லா இயற்கை உணவை உற்பத்தி செய்பவர்கள் உள்ளிட்ட விவசாய உற்பத்தியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விவசாய பொருட்களை மதிப்பு கூட்டப்பட்டு விற்பனை செய்வது குறித்தும், உற்பத்தி செய்யக்கூடிய பொருளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், விவசாய தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன..
இந்த நிகழ்வில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர். கிருஷ்ணன் மற்றும் வேல்முருகன், நபார்டு வங்கி விஸ்வந்த் கண்ணா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன், தஞ்சாவூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஃபுட் பிராசசிங் அண்ட் டெக்னாலஜி அதிகாரிகள், கோயம்புத்தூர் மற்றும் திருச்சி பகுதியை சேர்ந்த அக்ரோ பாரஸ்ட் பிசினஸ் இங்க்பேஷன் நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.