திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

Update: 2021-01-25 11:45 GMT

திருவாரூரில் பிரசித்தி பெற்ற திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருக்கண்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற சாந்தநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 17ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு யாகங்கள் வளர்க்கப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று காலை வரை 6 கால பூஜைகள் நடத்தப்பட்டது.

அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் ஆறுமுகம், சர்வசாதகம் என்று அழைக்கக் கூடிய தலைமை சிவாச்சாரியார்கள் மயிலாடுதுறை மற்றும் திருக்கண்டீஸ்வரம் கைலாசம் ஆகியோர் தலைமையிலும் கோயில் அர்ச்சகர் வெங்கடேச குருக்கள் முன்னிலையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் புனித நீர் கட புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து 10 மணி அளவில் அம்பாள், மூலவர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவின் தொடர்ச்சியாக இன்று மாலை திருக்கல்யாண வைபவமும் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News