மன்னார்குடி அருகே பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
மன்னார்குடி அருகே பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.;
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சந்திரசேகரன் என்பவரது மனைவி சந்திரா (வயது 71) என்பவர் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி சேரன் குளத்தில் திருமண விழா நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நடந்து வந்தார். அப்போது பின்புறமாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் விரைந்து விட்டார் .
இச்சம்பவம் குறித்து கோட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருத்துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் சங்கரன் ,பிரான்சிஸ் ,பாலமுருகன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தநிலையில் பெருகவாழ்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (42) என்பவரை பிடித்து விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவனிடமிருந்து திருடப்பட்ட நகையும் மீட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை அறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோட்டூர் காவல் நிலையத்திற்கு சென்று துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட தனிப்படை காவலர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.