22 கிராமங்களை உள்ளடக்கிய வடுவூர் தனி தாலுகா: கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம்
நீடாமங்கலம் ,கூத்தாநல்லூர் , மதுக்கூர் , வடுவூர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு மன்னார்குடியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும்
22 கிராமங்களை உள்ளடக்கிய வடுவூரை மையமாக வைத்து தனி தாலுகா உருவாக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் தென்பாதி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது . கிராமசபை கூட்டத்தில். பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இன்றி அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து பாதுகாப்போம் என உறுதி மொழியேற்றனர். அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் பேசுகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் அளிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார் .
இக்கூட்டத்தில் வடுவூர் பகுதியில் இயங்கி வந்த சார் பதிவாளர் அலுவலகம் மூடப்பட்டு இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மீண்டும் வடுவூர் பகுதிக்கு கொண்டு வரவேண்டும் . 22 கிராமங்களை உள்ளடக்கிய வடுவூர் பகுதியில் உள்ள மக்கள் நீடாமங்கலத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வர முடியவில்லை. எனவே, வடுவூரை மையமாக வைத்து தனி தாலுகா உருவாக்க வேண்டும். மன்னார்குடியை தலைமையிடமாக வைத்து நீடாமங்கலம் ,கூத்தாநல்லூர் , மதுக்கூர் , வடுவூர் உள்ளிட்ட பகுதிகளை கொண்டு மன்னார்குடியை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.