மன்னார்குடி கோதண்ட ராமர் கோயிலில் திருக்கல்யாணம்
மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமர் யானை வாகனத்திலும். சீதாதேவி அன்ன வாகனத்திலும் வீதியுலா நடைபெற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள வடுவூரில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று சிறப்புமிக்கது. இந்தகோவில் தமிழகத்தில் உள்ள ராமர் கோவில்களில் குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.கோதண்டராமரை அமர்ந்த திருக்கோலத்தில் யானையின் மீது எழுந்தருளச் செய்து வீதி உலா வரச் செய்தனர்.
அதேபோல சீதாதேவி தாயாரையும் மணமகளாக அலங்கரித்து அன்ன வாகனத்தில் நின்ற திருக்கோலத்தில் வீதி உலா வரச் செய்தனர். இரண்டு சுவாமிகளின் வீதி உலா நிறைவடைந்து கோவிலில் வந்ததும் மாலை மாற்றுதல் வைபவம் நடத்தப்பட்டது.
நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் முழங்க சீர்வரிசை கொண்டு வருதல், மாலை மாற்றுதல் ஆகிய வைபவம் நடத்தப்பட்ட பின்னர் சுவாமிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தங்க நகைகள் மலர் மாலைகளைச் அணிந்து சுவாமிகள் அருள்பாலித்தனர். அதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடத்தப்பட்டது