தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற வைணவ கோவில்களில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் கோதண்டராமர் கோவிலும் ஒன்றாகும். மிகவும் பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமியையொட்டி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கொடியேற்று நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியையொட்டி கோவிலின் மூலவர் சன்னதியில் இருந்து வில்லேந்திய திருக்கோலத்தில் கோதண்டராமசாமி புறப்பட்டு கோவிலில் வலம் வந்து, கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதையடுத்து கருடக்கொடி ஏற்றப்பட்டது.
விழாவில் சூரியபிரபை வாகனத்திலும், புதன்கிழமை வெள்ளி சேஷ வாகனத்திலும் வீதியுலா காட்சி நடைபெற்றது. 22-ந் தேதி கருடவாகனத்திலும், 23-ந் தேதி நாச்சியார் திருக்கோலத்திலும், அனுமந்த வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை யானை வாகனத்தில் கோதண்டராமர் மற்றும் அன்னவாகனத்தில் சீதாதேவி தாயார் வீதி உலா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 26-ந் தேதி திங்கட்கிழமை வெண்ணெய்த்தாழி உற்சவம், வெட்டுங்குதிரை திருவிழா நடக்கிறது. 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. 28-ந் தேதி சப்தாவரணத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கிராம நாட்டாமைகள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் தீட்சிதர்கள் செய்து வருகிறார்கள்.