மூன்று தலைமுறைகளாக அரசின் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டியலின மக்கள்
வலங்கைமான் அருகே மூன்று தலைமுறையாக அரசின் சலுகைகளை எதிர்நோக்கி 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்டது இருகரை எனும் கிராமம். ரெகுநாதபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இக் கிராமத்தில் கோதண்டராமசாமி ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 3 தலைமுறைக்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
மேல ஆதிதிராவிடர் தெரு என அழைக்கப்படும் இப்பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதால் அரசு இங்கு குடியிருப்பவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தருதல், வங்கி கடன் உதவி என எந்தவித அரசு சலுகைகளும் கிடைக்கப்பெறாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் இப்பகுதி மக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர் மழைக்காலங்களில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வீடுகளில் தண்ணீர்புகுந்து வீடு சேதம் அடைந்து உயிரழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.
ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் வீட்டில் போதிய இடவசதியில்லாமல் பெரிதும் பாதிக்கட்டு வருவதாகவும், மேலும் இவர்கள் வசிக்கும் தெருவிற்கு அருகே ஐயனார் கோவில் குளம் எதிரே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை அரசியல் பின்னணியில் தனிநபர் ஆக்கிரமித்து உள்ளனர்.
இதனை அரசு நிர்வாகம் மீட்டு இந்து சமய அறநிலையத்துறை நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் மூன்று தலைமுறை காலமாக வசித்துவரும் இக்குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டு என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.