கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்கள் திருவாரூர் வந்தது

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகளுக்காக கர்நாடகவில் இருந்து 95 நெல் அறுவடை இயந்திரங்கள் சரக்கு ரயில் மூலம் மன்னார்குடி வந்தது

Update: 2022-01-22 11:34 GMT

கர்நாடகாவிலிருந்து மன்னார்குடி வந்தடைந்த நெல் அறுவடை இயந்திரங்கள்

டெல்டா மாவட்டங்களில் செய்யப்படும் நெல் சாகுபடியில் சம்பா பருவ சாகுபடி பல லட்சம் ஏக்கரில் செய்யப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

இம்மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் கடந்த 10 தினங்களாக துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் ஈடுபடுவதற்காக இயந்திரங்கள் பற்றாக்குறை நீடித்து வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து 95 நெல் அறுவடை இயந்திரங்கள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு நேற்று இரவு 10.30 மணிக்கு இவை அனைத்தும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த இயந்திரங்களை வாடகைக்கு ஒப்பந்தம் செய்தவர்கள் இதனை இங்கிருந்து கொண்டு சென்றனர்.

நெல் அறுவடை இயந்திரங்கள் சரக்கு ரயிலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இந்த இயந்திரங்கள் வந்ததன் மூலம் அறுவடை பணிகள் தொய்வின்றி நடைபெறுவதுடன் விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அறுவடை இயந்திரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.

நெல் அறுவடை இயந்திரங்களை துரிதமாக கொண்டு வருவதற்கு தனி சரக்கு ரயில் மூலம் உதவிய இந்திய ரயில்வேக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

Tags:    

Similar News