மன்னார்குடி அருகே இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கூலிப்படை, திக்..திக்..

மன்னார்குடி அருகே பஸ்டாண்டில் நின்ற இன்ஸ்பெக்டரை கூலிப்படையினர் காரில் கடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2021-08-03 01:00 GMT

கூலிப்படையினரால் கடத்தப்பட்ட சுகாதார ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழ முதல் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (57). மன்னார்குடி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் கடந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து சீர்காழியில் அறை எடுத்து தங்கியிருந்து வரும் ராஜேந்திரன் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊரான மன்னார்குடிக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சொந்த ஊர் வந்து விட்டு மீண்டும் மன்னார்குடியில் இருந்து திருவாரூர் வழியாக மயிலாடுதுறை சென்றுள்ளார்.

அங்கு காலை 8 மணியளவில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீர்காழி பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு திடீரென காரில் வந்த டிரைவர் உட்பட 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜேந்திரனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து காரில் ஏற்றிக் கொண்டு பறந்தது.

இதனையடுத்து குடவாசல், கொரடாச்சேரி, திருவாரூர் உட்பட பல்வேறு ஊர்களில் காரில் சுற்றி திரிந்தபோது செல்லூர் என்ற இடத்தில் ராஜேந்திரன் பொதுமக்களைப் பார்த்து தன்னை காரில் மர்மநபர்கள் கடத்துவதாக சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பல் ராஜேந்திரனை தாக்கி தங்களிடமிருந்த கத்தியால் தொடையில் குத்தி உள்ளனர்.

பின்னர் இரவு 8 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சவளக்காரன் என்ற இடத்தில் ராஜேந்திரனை இறக்கிவிட்ட அந்த மர்ம கும்பல் இளங்கோ என்பவரது புகைப்படத்தை காட்டி இவர் உனது உறவினர் தானே இவர்தான் உன்னை கடத்த சொன்னார்.

இதற்கு ரூ 2 லட்சம் பேரம் பேசப் பட்ட நிலையில் 25 ஆயிரம் மட்டும்தான் கொடுத்துள்ளார். நீ நல்ல மனிதராக உள்ளாய் எனவே பிழைத்து போ என்று கூறிவிட்டு காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர் .

இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் தனது குடும்பத்திற்கு ராஜேந்திரன் தகவல் தெரிவித்ததையடுத்து உடனடியாக மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சையில் ராஜேந்திரன் இருந்து வரும் நிலையில் இந்த சம்பவமானது மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போலீசாரின் விசாரணையில் ராஜேந்திரனுக்கும் அவரை கடத்த சொன்னதாக மர்ம கும்பல் தெரிவிக்கும் உறவினருக்கும் இட பிரச்சனை ஒன்று இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி சீர்காழி நகராட்சி பகுதியில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருவதை மேற்படி ராஜேந்திரன் தடுத்ததாகவும் இதனால் அங்கு முன் விரோதம் இருந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் ராஜேந்திரனை காரில் கடத்திய கூலிபடையினை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .

இந்நிலையில் உடனடியாக காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டிபிடித்து உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி முன்பு  அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

குற்றவாளிகளை கண்டுபிக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெரும் என தெரிவித்தனர் .

Tags:    

Similar News