மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

மேகதாது அணை விவகாரம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலாளர் உடனடியாக கூட்டவேண்டும் என பிஆர் பாண்டியன் பேட்டி.

Update: 2021-04-16 05:12 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

கர்நாடக அரசாங்கம், தமிழகம் நோக்கி வரும் உபரி நீரையும் தடுத்து நிறுத்தி தமிழகத்தை அழித்துவிட வேண்டும் என்கிற நயவஞ்சக நடவடிக்கையாக காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தில் ரூ 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கி உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார் .

இதனை எதிர்த்து தமிழக காவிரி விவசாய சங்கம் மேகதாது பகுதியை முற்றுகையிட சென்றோம், தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தியது. தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நேரத்தில் நேற்றைக்கு முன்தினம் கடந்த 12ஆம் தேதி பிஆர்.பாண்டியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு மேகதாட்டு பகுதியை ஆய்வு செய்தார். அங்கு அணை கட்டுவதற்கு கற்களும் மணலும் குறிக்கப்பட்டிருக்கிறது. வாகனங்கள் செல்வதற்கு சாலைகள் உருவாக்கப்பட்டு லாரிகள் சென்று வரும் வகையில் அதற்கான ஏற்பாடுகளை நடத்தியிருக்கிறது. இன்னும் பணிகள் விரைந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஆனால் தமிழகமும் பாதிக்கும் கர்நாடகமும் பாதிக்கும் அந்த மேகதாது பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில் அணை கட்டுவதற்கான ஆதாரங்களோடு செய்திகளை வெளியிட்டதை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் இன்றைக்கு அவசரமாக காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்தியதாகவும், அக்கூட்டத்தில் உடனடியாக இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று என்னோடு காவிரி கண்காணிப்பு குழு தலைவரும் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் முதன்மைபொறியாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்மை நிலை குறித்து கேட்டறிந்ததோடு விளக்க கடிதத்தை உடனடியாக அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உடனடியாக கடிதம் அனுப்பி வைத்திருக்கிறோம்.

தமிழக அரசு அதிகாரிகள் காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆதாரத்தோடு அணைக்கட்டு தொடங்கியிருப்பதாக விவாதத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். இதை எடுத்துக் கூறியிருக்கிறார்கள் எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து கட்சி கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்துவதற்கான போர்க்கால அடிப்படையில் தலைமைச்செயலாளர் மேற்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன், இல்லையேல் தமிழகத்தில் சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்கள் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாலைவனமாக மாறும் தமிழர்களுடைய உணவு உற்பத்தி அழிந்து போகும் பொருளாதாரம் முடங்கும், எனவே தமிழகத்தை காப்பாற்ற அனைத்து கட்சிகளும் இணைந்து முன்வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News