மன்னார்குடி அருகே ஸ்ரீ ஓலைகொண்ட ஐயனார் கோவில் மகாகும்பாபிஷேகம்
மன்னார்குடி அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஓலைகொண்ட ஐயனார் ஆலய மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த 17 செருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள தொன்மை சிறப்புமிக்க 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீஓலைகொண்ட ஐயனார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக இன்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி நான்கு கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக் கொண்டு நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், லட்சுமிஹோமம், அக்னிஹோமம் ஆகியவை நடைபெற்றது. இதன் நிறைவாக 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து ஆலயத்தினை வலம் வந்து கோபுர விமான கலசங்களை அடைந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
இதனை தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். இப்பகுதி மக்களின் எல்லை தெய்வமாகவும், வேண்டுதலை நிறைவேற்றும் பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்கும் இவ்வாலயத்தின் குடமுழக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஓலைகொண்ட ஐயனார் மற்றும் ஸ்ரீஆதியப்பன், ஸ்ரீதூண்டிக்காரன், ஸ்ரீமுன்னோடியான் முதலான ஆலயத்தின் பரிகார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது.