மன்னார்குடியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் முட்டை அனுப்பி வைப்பு
மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் 1 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். அடுத்தது ஹைதராபாத். அதற்கு அடுத்த நிலையில் தான் வட மாநிலங்கள் உள்ளன. தற்போது நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 4 கோடி கோழிகள் மூலம் சுமார் 2.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டைஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலைக்கு பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டையைக் கொள்முதல் செய்து வருகின்றனர். நாமக்கல் மண்டலத்தில் இருந்து சாலை போக்குவரத்து மற்றும் ரயில்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கும் முட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன. ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்கள்மூலம் வட மாநிலங்களுக்கு முட்டைகள்அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மணடலத்திற்குட்டபட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு 1 லட்சம்முட்டைகள் 478 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு சாலை மார்க்கமாக மினி லாரிகள் மூலம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு நேற்றுகாலை கொண்டு வரப்பட்டது.
பின்னர்,மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு செல்லும் பகல்கீ கோத்தி பயணிகள் விரைவு ரயிலில் முட்டைகள் அடங்கிய பெட்டிகள் ஏற்றப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இப்பணிகளை நிலையகண்காணிப்பாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரயில் மூலம் வட மாநிலத்திற்கு முட்டைகள் அனுப்பி வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முலம் ஆண்டுக்கு சுமார் 35 லட்சம் ரூபாய் கூடுதல் பார்சல் வருவாயாக மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு கிடைக்கும் என ரயில்வே வட்டாரங்களில் கூறப்படுகிறது.