மன்னார்குடியில் பேரிடர் தடுப்பு ஒத்திகை; தீயணைப்புத்துறையினர் பங்கேற்பு

மன்னார்குடியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.;

Update: 2021-08-07 06:15 GMT

பேரிடம் தடுப்பு ஒத்திகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் வீரர்கள்.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் வருவாய்துறையினர் இணைந்து மன்னார்குடியில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்மேற்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு மழை வெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை வருவாய் துறையினரோடு இணைந்து நடத்திட வேண்டும் என தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட உதவி அலுவலர் முருகேசன் ஆகியோர் அறிவுறுத்தியிருந்தனர்.

அதன்படி, தீயணைப்பு மீட்பு துறை மற்றும் வருவாய் துறை சார்பில் தென் மேற்கு பருவமழை கால பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரித்திராநதி தெப்பக்குளத்தில் நடைபெற்றது. இதில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி பங்கேற்று பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, மழை, வெள்ள காலங்களில் நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை படகு மூலம் எப்படி மீட்பது, வெள்ளப் பெருக்கு அதிகம் ஏற்படும் போது கிடைக்கின்ற பொருட்களான மரக் கட்டை கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தகரப் பெட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வெள்ள நீரில் எவ்வாறு தப்பித்து கரை ஏறுவது, புயல் காரணமாக சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை எவ்வாறு அகற்றுவது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.

Tags:    

Similar News