பறக்கும் இயந்திரம் (ட்ரோன்) மூலம் பயிருக்கு மருந்து தெளிக்கும் செயல் விளக்கம்
விவசாயிகளுக்கு நெல்வயலில் பறக்கும் இயந்திரம் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் செயல்விளக்கமளிக்கப்பட்டது
மன்னார்குடி தாலுகாவில் நெல் வயலில் பறக்கும் இயந்திரம் (ட்ரோன்) மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் செயல் விளக்கம் நடைபெற்றது
மன்னார்குடியில் தொழில் நுட்ப நிறுவனம் மூலம் பறக்கும் இயந்திரத்தின் (ட்ரோன்) வாயிலாக பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் செயல் விளக்கத்தை மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் துவக்கி வைத்தார்.திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 88,780 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு 1,37,360 ஏக்கரில் இதுவரை இல்லாத அளவு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், தமிழக அரசு குறுவை தொகுப்பு திட்டத்தினை அறிவித்து டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் இதுவரை இல்லாத அளவில் ரசாயன உரங்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கியதால் கடந்த ஆண்டை விட 40448 ஏக்கர் கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டு இந்த சாதனை செய்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் 25 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள ASP-16 ரக நெல்லில் பறக்கும் இயந்திரம் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிக்கும் செயல்விளக்கம், சென்னை தொழில் நுட்ப நிறுவனம் மூலம் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
முன்னதாக, மன்னார்குடி அருகே கீழ நாகை கிராமத்தில், கருடா காயர் நிறுவனத்தில் கயிறு உற்பத்தி தொழிற்சாலையை மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் , மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பார்வையிட்டு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மகளிர்குழு பெண்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்தனர். அப்போது இங்கு உற்பத்தி செய்யும் கயிறு, கால் மிதியடி உள்ளிட்ட பொருட்களை இடைத்தரகர் இல்லாமல் அரசே உற்பத்தி செய்து மகளிர் குழுபெண்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தனர்.